Tuesday 10 April 2012

நின்னை சரணடைந்தேன் பாரதி !!

சுப்ரமணிய பாரதி - நவீன தமிழ் கவிதையின் முன்னோடி..

இங்க பாரதியோட பிறப்பு வளர்ப்பு கவிதை திறன் இத பத்திலாம் பேச போறது இல்ல.. ஏன்னா அது எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.. ஸ்கூல் படிக்கறப்போ 5+ மதிப்பெண்களுக்காக நம்ம படிச்ச பாரதியோட வாழ்க்கை வரலாறுலாம் திரும்பவும் இங்க நான் சொல்ல விரும்பல..
நான் இங்க அப்போ என்ன சொல்ல போறேன்னு கேக்கறீங்களா??
பாரதியின் கவிதைகளில் எனக்கு புடிச்ச சில வரிகளை நான் உங்களோட பகிர்ந்துக்க போறேன்..


மொதல்ல எல்லாருக்கும் ரொம்ப தெரிஞ்ச பாட்டுலயே ஆரம்பிப்போம்..

அச்சமில்லை
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
(நம்மள உபயோகமே இல்லாத ஒரு பொருளா, அஃறிணையா நெனச்சி தூக்கி போட்டா கூட பயமில்ல..)
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
(நம்ம வேண்டி வேண்டி ரொம்ப விருப்பபட்டு கெடைச்ச பொருளெல்லாம் நம்மள விட்டு போனா கூட பயமில்ல..)
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
(என் நடு மண்டைல நச்சுனு இடியே விழுந்தாலும் பயமில்ல..)

காலனுக்கு உரைத்தல்
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்
(காலன் என்றால் யமன்.. அதாவது யமனே என் முன்னாடி வந்தாலும் காலால எட்டி ஒதைப்பேன் அப்படின்னு சொல்றாரு)

மனிதனுக்கு மரணமில்லை (Man is Immortal)

கருங்கற்பாளைய (ஈரோடு பக்கத்துல) வாசகசாலையின்(LIBRARY) 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு ‘மனிதனுக்கு மரணமில்லை’.
(அவரின் இறுதி உரை). அதில் எனக்கு புடிச்ச வரிகள்..
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனைஅழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்'
(கோபத்தை பயத்தை, ஒன்றை அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பத்தை நம்ம தூக்கி தூர போட்டுட்டோம் என்றால் அப்புறம் சாவு எல்லாம் நமக்கு கிடையாது. அவர் கூற வருவது நாம் இறந்த பிறகும் நாம் வாழ்வோம் என்பதே).

ஒளவையும் பாரதியும்

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்..

"தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.
"தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.
(தையல் = பெண்)

"ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ 
"ரௌத்திரம் பழகு" என்றார்.

"தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை.
"தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி.
(தொன்மை = பழைமை)

"போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை.
"போர்த்தொழில் பழகு" என்றார் இவர்.

"மீதூண் விரும்பேல்" என்றாள் அவள்.
"ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.
(ஊண் = உணவு)

கண்ணம்மா-எனது குல தெய்வம்
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் 
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்..
(விதியால தான் எல்லாம் நடக்குது அப்படின்னு நான் நெனைக்கற நெனைப்ப நிறுத்திடு.
எல்லாமே உன் செயல்களால தான் நடக்குது.. கண்ணம்மா என்பது கண்ணனையே குறிக்கும்)

நல்லதோர் வீணை
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் 
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், 
நசையறு மனங்கேட்டேன், - நித்தம் 
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், 
தசையினைத் தீசுடினும் - சிவ 
சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன், 
அசைவறு மதிகேட்டேன்; இவை 
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 
எந்த பக்கம் விசை(FORCE) தரோமோ அந்த பக்கம் போகும் பந்தை போல என் மனசு சொல்ற மாறி என் ஒடம்பு செய்யணும்னு கேட்டேன்..
எந்த ஆசையும் இல்லாத மனம் கேட்டேன்.. தினமும் புதுசா பொறக்க வேணும்னு கேட்டேன்..
நான் கொழுந்து விட்டு எரிஞ்சாலும் உன்ன பாடுற நல்ல மனம் கேட்டேன்..
அசைக்க முடியாத அறிவு கேட்டேன்..
இது எல்லாம் எனக்கு தருவதில் உனக்கு என்ன தடை..

கண்ணம்மா-என் காதலி
வார்த்தைதவறிவிட்டாய் அடிகண்ணம்மா! 
மார்புதுடிக்குதடி! 
பார்த்தஇடத்திலெல்லாம் -உன்னைபோலவே 
பாவைதெரியுதடி!
குறிப்பிடம் தவறியது - தீர்த்தக் கரையினிலே..

தேடிச்சோறுநிதம்தின்று
தேடிச்சோறுநிதம்தின்று –பல 
சின்னஞ்சிறுகதைகள்பேசி –மனம் 
வாடிதுன்பம்மிகஉழன்று –பிறர் 
வாடபலசெயல்கள்செய்து –நரை 
கூடிகிழப்பருவமெய்தி –கொடுங் 
கூற்றுக்கிரையெனப்பின்மாயும் –பல 
வேடிக்கைமனிதரைப்போல் -நான் 
வீழ்வேனென்றுநினைத்தாயோ ?? 
எல்லா சாதாரண மனுஷங்கள போல நான் இல்லை.
தினமும் சாப்பிட்டு வேலை செய்து தீய செயல்கள் புரிந்து வயசாகி செத்துபோற அந்த சராசரி மனுஷன போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயா??

முரசு
கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி 
காட்சி கெடுத்திட லாமோ? 
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம் 
பேதமை யற்றிடுங் காணீர். 

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில் 
மானுடர் வேற்றுமை யில்லை, 
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு 
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

பெண்களை உயர்வாகவும் ஜாதி பேதமை இல்லாமல் சமுதாயம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் முண்டாசு கவிஞன் எழுதிய பாடல் இது..

இன்னும் பல பல சிறந்த பாடல்கள் நம் பாரதி இயற்றி உள்ளான். அதை இன்னுமொரு வலைப்பதிவில் எழுதுகிறேன்..
இறுதியாக எல்லோருக்கும் பிடித்த தெரிந்த மிகவும் பிரபலமான ஒன்று..

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

கவிதை எழுதுபவன் கவியன்று..
கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாக செய்தோன், அவனே கவி - மகாகவி

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

9 comments: